குஜிலியம்பாறையில் விபத்தில் கைக்குழந்தையை இழந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
குஜிலியம்பாறையில் விபத்தில் கைக்குழந்தையை இழந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
வேடசந்தூர் தாலுகா வடமதுரையை அடுத்த பாகாநத்தம் அருகே உள்ள தோப்பூரை சேர்ந்தவர் காளியப்பன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 40). இவர்களுக்கு சரிமிளா என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு பழனியம்மாள் தனது கைக்குழந்தையுடன் வேடசந்தூர் அருகே கோவிலூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார்.
அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் பழனியம்மாள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கைக்குழந்தை படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது. பழனியம்மாள் படுகாயமடைந்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே காளியப்பன் தரப்பில் இழப்பீடு கேட்டு வேடசந்தூர் சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கார்த்திகேயன் இந்த வழக்கை நடத்தி வந்தார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மதுரை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சத்து 58 ஆயிரத்து 711 வழங்க வேண்டும் என்று நீதிபதி வனிதா உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.
இதையடுத்து காளியப்பன் சார்பில் சப்-கோர்ட்டில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணக்குமார், மதுரை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர்.