பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர்
வந்தவாசி அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவிகளிடம் சில்மிஷம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழவங்கரணை கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் வந்தவாசியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வந்தவாசி பணிமனை-2 சார்பில் ஒரத்தியில் இருந்து மழவங்கரணை கூட்டுச்சாலை வழியாக வந்தவாசிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் மாணவிகள் செல்வார்கள்.
இந்த பஸ்சின் டிரைவர் ஒருவர் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
அரசு பஸ் சிறைபிடிப்பு
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இன்று காலை அந்த கிராம கூட்டுச்சாலை வழியாக வந்த அரசு பஸ்சை மறித்தனர்.
ஆனால் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவர் பணியில் இல்லை. இதனால் பொதுமக்கள் அந்த பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்தப் பஸ்சில் டிரைவராக பணிபுரியும் ஒருவர் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் மாணவிகள் இந்த பஸ்சில் பள்ளிக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் மற்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள், டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சை விடுவித்தனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.