அரசு பஸ்-மினிலாரி மோதல்; 4 பேர் படுகாயம்
வெள்ளமடம் அருகே நான்கு வழிச்சாலையில் அரசு பஸ்-மினிலாரி மோதிக் கொண்டதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி,
வெள்ளமடம் அருகே நான்கு வழிச்சாலையில் அரசு பஸ்-மினிலாரி மோதிக் கொண்டதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ்-மினிலாரி மோதல்
நாகர்கோவிலில் இருந்து ராஜாவூர் வழியாக ஆதலவிளை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை தக்கலை முத்தலக்குறிச்சியை சேர்ந்த முருகப்பன் (வயது 55) என்பவர் ஓட்டிவந்தார்.
இந்த பஸ் வெள்ளமடம்-குலசேகரன்புதூர் இடையே உள்ள 4 வழிச்சாலையில் காலை 6.30 மணிக்கு சென்றது. அப்போது ஓசூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு காய்கறி ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. அந்த சமயத்தில் மினிலாரியும், பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
4 பேர் படுகாயம்
இந்த விபத்தில் டிரைவர் முருகப்பன், கண்டக்டர் ஜெயக்குமார், டெம்போ டிரைவரான தர்மபுரியை சேர்ந்த சதீஷ் (23), உடன் வந்த விஜய் (30) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் சாலை மறியல்
விபத்து நடந்த வெள்ளமடம்-குலசேகரன்புதூர் சாலை புதிய நான்கு வழிச்சாலையில் குறுக்காக செல்கிறது. 4 வழிச்சாலையில் இணையும் இருபகுதியும் மிகவும் செங்குத்தாக உள்ளது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் தேரூர் பஞ்சாயத்து தலைவர் அமுதா ராணி தலைமையில் விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கவுன்சிலர்கள் வீரபுத்திரன், ஆறுமுகம், கணேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சிவா, ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் செங்குத்தாக இருக்கும் பகுதியை சாய்வாக மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.