வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பஸ்; 80 பேர் படுகாயம்
விருத்தாசலம் அருகே வாய்க்காலில் தலைக்குப்புற அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 80 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். பஸ்சை கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சாத்தியம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் (50) என்பவர் பணிபுரிந்தார்.
இந்த பஸ் காலை 8 மணிக்கு விருத்தாசலம் கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே மினிலாரி ஒன்று வந்தது. இதைபார்த்த டிரைவர், அதன் மீது மோதாமல் இருக்க பஸ்சை சாலையோரமாக இயக்கினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோரத்தில் இருந்த ராஜா வாய்க்காலில் சினிமாவில் நடக்கும் சம்பவத்தை போல உருண்டோடி தலைக்குப்புற கவிழ்ந்தது.
மூச்சுத்திணறல்
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளில் பயணிகள் சிக்கியதோடு, ஒருவரின் மேல் ஒருவர் விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் வாய்க்காலில் தண்ணீர் சென்றதால் சில பயணிகள் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விரைந்து வந்து பஸ் கண்ணாடியை உடைத்து விபத்தில் சிக்கிய பஸ்சுக்குள் சென்று டிரைவர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்டனர். விபத்தில் சிக்கியவர்களை இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
மீட்பு பணியில் அமைச்சர்
அந்த சமயத்தில் அந்த வழியாக காரில் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விபத்து சம்பவத்தை பார்த்தவுடன் காரில் இருந்து இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் சரவணன், பயணிகளான பரவலூர் ராதா (38), சாத்தியம் செல்வி (50), சரசு (40), பிளஸ்-2 மாணவிகள் விஜயகுமாரி (17), கீரம்பூர் பிரியங்கா (17), ரேணுகா (17), பத்தாம் வகுப்பு மாணவி கீரம்பூர் லோகேஸ்வரி (15), நல்லூர் நகர் செல்வராணி (52), படுகளாநத்தம் பூங்காவனம் (50), சிவமாலை (50), வித்யா (36), இலங்கியனூர் மோகன் (30), மே.மாத்தூர் செல்வி (50) உள்பட 80-க்கும் மேற்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்குள் செல்ல ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஊழியர்களுடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை விருத்தாசலம் போலீசார் சமாதானப்படுத்தினர்.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அங்கிருந்த மருத்துவர்களிடம், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது விருத்தாசலம் தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் எழில், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கோவிந்தசாமி, அரசு வக்கீல் செந்தில்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
====