அரசு பஸ்-லாரி மோதல்; பெண்கள் உள்பட 11 பேர் காயம்
அரசு பஸ்-லாரி மோதல்; பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.
ஆவுடையார்கோவில்:
பஸ்-லாரி மோதல்
ஆவுடையார்கோவிலில் இருந்து ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் தச்சமல்லி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் களப்பக்காட்டை சேர்ந்த ஜெயரத்தினம்(வயது 50) ஓட்டி வந்தார். கண்டக்டராக தச்சமல்லி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி(35) பணியில் இருந்தார்.
சாட்டியக்குடி பஸ் நிறுத்தம் அருகே அந்த பஸ் வந்தபோது எதிரே நெல்மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. லாரியும் முன்பகுதியும் சேதமடைந்தது.
11 பேர் காயம்
இந்த விபத்தில் பஸ் டிரைவர் ஜெயரத்தினம், கண்டக்டர் பழனிச்சாமி, லாரி டிரைவர் புண்ணியவயல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(57) மற்றும் பயணிகள் ஆவணத்தான்கோட்டையை சேர்ந்த பாலுவின் மனைவி மங்கையர்கரசி(35), செல்வராஜின் மனைவி லட்சுமி(40), ரமேசின் மனைவி உமா(23), கருப்பையாவின் மகன் ரமேஷ்(25), ரமேசின் மகன் அர்ஜூனன்(4), ரத்தினம் மகன் ஜெயபால்(45), ஆறுமுகத்தின் மனைவி ஆராயி(60), தச்சமல்லியை சேர்ந்த காளிமுத்துவின் மனைவி கனகாம்பாள்(55) என 11 பேர் காயமடைந்தனர்.அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.