அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நிலைப்பு ஆணை: தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நிலைப்பு ஆணை: தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x

அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நிலைப்பு ஆணை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவி பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் அலட்சியத்தால் உதவி பேராசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பணி நிலை உயர்வு மறுக்கப்பட்டு வருவது நியாயப்படுத்த முடியாத அநீதி ஆகும்.

கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் குளறுபடிகள்தான் அனைத்து தாமதத்திற்கும், அநீதிக்கும் காரணம் ஆகும். பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்கள் தங்களது சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து விட்டனர். ஆனால், பணியில் சேர்ந்த பிறகு உயிரிழந்த உதவி பேராசிரியர்கள், நியமிக்கப்பட்ட பிறகும் பணியில் சேராத உதவி பேராசிரியர்களை பற்றிய விவரங்களையும் கல்லூரிகளிடம் இருந்து இயக்குனர் அலுவலகம் கோருகிறது. இல்லாத உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் எவ்வாறு வழங்க முடியும்?.

எனவே, 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து உதவி பேராசிரியர்களுக்கும் உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், அவர் களுக்கு வழங்க வேண்டிய பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் உரிய காலத்தில் இருந்து கணக்கிட்டு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story