வடபழனியில் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்
வடபழனியில் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு, தண்ணீர் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடபழனி,
சென்னை வடபழனி, திருநகரில் அரசு கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இங்கு சென்னையில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் 175 பேர் தங்கி உள்ளனர்.
இவர்களுக்கு விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், குடிநீரில் புழுக்கள் காணப்படுவதுடன், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேலும் மாணவர்களை விடுதி காப்பாளர் தரக்குறைவாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் நேற்று காலை அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் வடபழனி-நெற்குன்றம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கலைத்து விட்டனர்.
இதனால் சாலை மறியலை கைவிட்ட மாணவர்கள், சாலையோரமாக நின்று தங்களுக்கு தரமான உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
அப்போது அங்கு வந்த சென்னை மாவட்ட துணை கலெக்டர் இளங்கோ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாணவர்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.