கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு
உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு சொந்த வீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர். அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு சொந்த வீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் தாய் அமைச்சர் சேகர் பாபுவிடம் வைத்த கோரிக்கையின் அடிப்பையில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாணவி பிரியா குடும்பத்திற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.