குழந்தையின் எடையை 540 கிராமில் இருந்து 1.5 கிலோவாக அதிகரிக்க செய்த அரசு டாக்டர்கள்
நாகையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடையை 540 கிராமில் இருந்து 1.5 கிலோவாக அதிகரிக்க செய்த அரசு டாக்டர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பாராட்டு தெரிவித்தார்.
நாகையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடையை 540 கிராமில் இருந்து 1.5 கிலோவாக அதிகரிக்க செய்த அரசு டாக்டர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பாராட்டு தெரிவித்தார்.
குறை பிரசவம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கோகூரை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மனைவி சரண்யா. இந்த தம்பதியருக்கு 7 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த சரண்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் ேததி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் குழந்ைத பிறந்தது. 7 மாதத்தில் குறை பிரசவமாக பிறந்த இந்த குழந்தையின் எடை 540 கிராம் மட்டுமே இருந்தது.
உயிர் பிழைக்க 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்த நிலையில் குழந்தை, நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
எடை அதிகரிப்பு
தாய்ப்பால் குடிக்கும் திறன்கூட இல்லாமல் உயிருக்கு ஆபத்தான மூச்சுத் திணறல், கிருமி தொற்று, ரத்தசோகை போன்ற பல்வேறு பிரச்சினைகள் குழந்தைக்கு இருந்தது. இதையடுத்து டாக்டர்கள் செயற்கை சுவாசக்கருவி, உயிர் காக்கும் மருந்துகள் மூலம் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக குழந்தையின் எடை 1.5 கிலோவாக அதிகரித்தது.
கலெக்டர் பாராட்டு
தமிழ்நாட்டில் 600 கிராம் எடைக்கு கீழ் பிறந்த குழந்தைகளில் 10-வது குழந்தையாக இந்த குழந்தை காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து எடை அதிகரிக்க உதவிய அரசு டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்களுக்கு சான்றிதழ்கள், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். அப்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெனிட்டா கிரிஸ்டியானா ரஞ்சனா, மருத்துவ கண்காணிப்பாளர் முகமது மொஹைதின் காதர், குடியுரிமை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.