அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம்
தஞ்சை மாவட்டத்தில் 5-வது நாளாக அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டத்தில் டாக்டர்கள் கடந்த 12-ந்தேதி முதல் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று 5-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.
வழங்க வேண்டும்
அரசு டாக்டர்களின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையான அரசாணை 354- மறுவரையறை செய்வதில் காலதாமதம், பொது சுகாதாரத்துறை பணி நேரம் எந்தவித நியாயமான அடிப்படையோ, அறிவியல் காரணமோ இல்லாமல் தொழிலாளர் விதிகளுக்கு புறம்பான வகையில் நீடிக்கும் அரசாணை 225-ஐ கண்டிப்பது.
டாக்டர்கள் சேமநலநிதி, டி.ஜி.எப். திட்டத்தில் அரசு டாக்டர்களின் கூட்டமைப்பின் முயற்சியால் சேர்ந்த பிறகும் பயனாளிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுக்குழு கூட்டம்
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜகுமாரன், துணைத்தலைவர் பிரதீப்குமார், மாவட்ட நிர்வாகிகள் சகில், கவுதம், மரியஜோஸ்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் டாக்டர் அகிலன், மருத்துவ கல்வி இயக்க பிரவு செயலாளர் பூவரசன், ரேடியாலஜி உதவி பேராசிரியர் இலக்கியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இது குறித்து மாநில செயலாளர் டாக்டர் அகிலன் கூறுகையில், "டாக்டர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு எடுத்துரைக்கும்விதமாக அனைத்து அரசு டாக்டர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகிறோம். மேலும் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதுவரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவோம்" என்றார்.