அரசு ஊழியர்கள் ஊர்வலம்
5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் முன்னிலை வகித்தார். நீதித்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ், ஊரக வளர்ச்சித் துறை சங்க மாநில துணைத்தலைவர் ஜம்ரூத்நிஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் நிரந்தப்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக மாற்றிட வேண்டும். கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக சென்று அவுரி திடலை சென்றடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.