அரசு ஊழியர் சங்கத்தினர்25 இடங்களில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, தேனி கலெக்டர் அலுவலகம், தேனி தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 25 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளை செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பேயத்தேவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் தாஜூதீன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், அழகுராஜூ, முத்தையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தனது வாக்குறுதியில் அறிவித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும். முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சமூக நீதிக்கு எதிரான அரசாணைகள் 115, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். தேனி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முருகேசன், பவுன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.