மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழும் அரசு மருத்துவமனை கட்டிடம்
சோளிங்கரில் உள்ள அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்ததால் இங்கு இயங்கி வந்த குழந்தைகள் நலப்பிரிவு மூடப்பட்டது.
சோளிங்கரில் உள்ள அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்ததால் இங்கு இயங்கி வந்த குழந்தைகள் நலப்பிரிவு மூடப்பட்டது.
உடைந்து விழும் சிமெண்டு பூச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் நூறாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில் அவசரபிரிவு, உள் நோயாளி ஆண், பெண் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு பிரிவு இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் குழந்தைகள் நல பிரிவின் மேல்பகுதியில் உள்ள சிமெண்டு பூச்சு உடைந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் அந்த பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ளதால் ராணிப்பேட்டை, வேலூர், சித்தூர், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட மக்கள் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய கட்டிடம்
இந்த கட்டிடத்தை சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் சோளிங்கர் மருத்துவமனை தேசிய தரச்சான்றிதழ் பெற்ற அரசு மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தற்போது பழுதடைந்துள்ளதால் இந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டவும், சில கட்டிடங்களை புனரமைக்கவும் அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதனால் மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார். மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், விபத்தில் படுகாயம் அடைந்து வரும் நபர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும், ஆம்புலன்சில் குழந்தை பிறப்புகளை தவிர்க்கும் வகையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் நகர தலைவர் கோபால், தொகுதி பொறுப்பாளர் ராஜா, செங்கல் நத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் ரகுராம் ராஜ், தலைமை மருத்துவர் இளங்கோவன், மருத்துவர் நவீன் மற்றும் பலர் உடனிருந்தனர்.