5 ஆண்டுகளில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு வீடுகள் கட்டி தரப்படும்


5 ஆண்டுகளில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு வீடுகள் கட்டி தரப்படும்
x

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாகும். எனவே 5 ஆண்டுகளில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு வீடுகள் கட்டித் தரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாகும். எனவே 5 ஆண்டுகளில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு வீடுகள் கட்டித் தரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

பொதுமக்கள் குறைகள் கேட்பு

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லவன்பாளையம், கீழ்செட்டிப்பட்டு, மேல்செட்டிப்பட்டு, விஸ்வந்தாங்கல், கீழ்சிறுப்பாக்கம் ஆகிய 5 ஊராட்சிகளில் தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிதல் முகாம் இன்று நடைபெற்றது.

கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஏரி நீர்பிடிப்பு

நீங்கள் கொடுக்கும் மனுக்களுக்கு, விதிகளுக்குட்பட்ட மனுக்களுக்கு மட்டுமே தீர்வு காணப்படும். தகுதியற்ற மற்ற மனுக்களுக்கு அரசு அதிகாரிகள் மூலம் பதில் தரப்படும்.

கீழ்செட்டிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ரோடு வடக்கு பகுதியில் பட்டா வேண்டுமென்று மனு அளித்திருந்தனர். ஐகோர்ட்டில் ஏரி நீர்பிடிப்பு புறம்போக்கு பகுதிகளில் பட்டா வழங்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருநாள் முன்னதாக இந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்கியுள்ளேன்.

ஆனால் இன்றைக்கு கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்குகளில் வீடு கட்டியுள்ளவர்களுக்கு பட்டா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கே முதியோர் உதவித்தொகை கோரி நிறையபேர் மனு கொடுத்துள்ளனர்.

வசதி படைத்தவர்களும் முதியோர் உதவித்தொகை கோரி மனு கொடுத்திருக்கிறார்கள். எனவே தகுதியான மனுக்களுக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்க இயலும். என்னிடம் தகுதியில்லாத மனுக்கள் கொடுத்தால் அதிகாரிகள் மூலம் பதில் மட்டுமேதான் கிடைக்கும்.

குடிசைகள் இல்லாத மாநிலமாக

இலவச வீடு வழங்க தகுதியான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளில் குடிசை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டுமென்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு மூலம் இலவச வீடு கட்டி தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வீட்டு மனை பட்டா, இலவச தொகுப்பு வீடு, முதியோர் உதவித்தொகை, சாதிச்சான்று, கடனுதவி, கல்வி உதவிதொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.

மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு துறைவாரியாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உதவித்தொகை

அதனைத் தொடர்ந்து முகாமில் முதியோர் உதவித்தொகை மனு கொடுத்த தகுதி வாய்ந்த 4 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளாகலையரசன், நகர தி.மு.க. செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய்ரங்கன், ஆணையாளர்கள் பரமேஸ்வரன், நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.பி.மகாதேவன், மரியதேவ்ஆனந்த், தாசில்தார் எஸ்.சுரேஷ், பரிமளா உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story