சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு துணை நிற்கும்; அமைச்சர் சிவசங்கர் பேட்டி


சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு துணை நிற்கும்; அமைச்சர் சிவசங்கர் பேட்டி
x

சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

பெரம்பலூர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் தலா 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளான நேற்று சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பணியாளர்களின் போராட்டத்தினால் 3-வது நாளாக திருமாந்துறை, செங்குறிச்சி ஆகிய 2 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாததாலும், பாஸ்ட் டேக் செயல்படாததாலும் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றன. இந்த நிலையில் சுங்கச்சாவடி பணியாளர்களின் காத்திருப்பு போராட்டத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்கள் போராட்ட களத்தில் பணியாளர்களுடன் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறுகையில், சுங்கச்சாவடியில் கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த 56 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளனர். அந்த அலுவலகம் புதுச்சேரியில் அமைந்துள்ளது. நானும், தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதனை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும் தமிழக எம்.பி.க்கள் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இந்த சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு துணை நிற்கும், என்றார். அப்போது லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவர் ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போராட்டம் இரவிலும் நீடித்தது. 2 சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த உரிமத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியின் உறவினர் ஒருவரின் தனியார் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story