அரசு அலுவலர்கள் வாரத்திற்கு ஒருநாள் கதர் ஆடை அணிய வேண்டும் கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் வாரத்திற்கு ஒருநாள் கதர் ஆடை அணிய வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தீபாவளி சிறப்பு விற்பனையை அவர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட கதர் விற்பனை அங்காடி மூலமாக தரமான அசல் கதர் பட்டு புடவை, கதர் பருத்தி ரகங்கள் மற்றும் கதர் பாலிஸ்டர் ரகங்கள், வேஷ்டி, துண்டு, ரெடிமேட் சட்டை, போர்வை, தரமான இலவம் பஞ்சு மெத்தை, மெத்தை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, குளியல் மற்றும் சலவை சோப்பு வகைகள், தேன் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இலக்கு நிர்ணயம்
அரசு ஊழியர்களுக்கு கதர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 10 மாத சுலப தவணையில் கடன் வழங்கப்படுகிறது. எனவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு கதர் ஆடையை அணிந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி மற்றும் விழாக்காலங்களை கொண்டாடி மகிழுங்கள்.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டு அந்த இலக்கு முழுமை அடைந்துள்ளது. இந்தாண்டு ரூ.1 கோடியே 50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு விற்பனைக்கு 30 சதவீதம் கதர், பாலிஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடையை அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், கதர் அங்காடி மேளாலர் கலியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.