தமிழகத்தில் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு திட்டம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
சீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தில் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு திட்டமிட்டு இருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் சத்துணவு திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சத்துணவு திட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், சத்துணவு மையங்களை மூடுவதோ அல்லது ஒருங்கிணைப்பதோ சத்துணவு திட்டத்தை வலுவிழக்கவே செய்யும்.
தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். அதனால் சுமார் 85 ஆயிரம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மோசமான பணியாளர் விரோத நடவடிக்கையாகவே அமையும்.
அரசுக்கு பெருமை சேர்க்காது
ஒருபுறம், காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் தமிழகத்தில் 1,545 தொடக்கப்பள்ளிகளில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதனால், காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும், அந்தந்த பள்ளிகளில் சமைத்து வழங்கும் வகையில் விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய சமூக நலத்துறை, அதை விடுத்து சத்துணவு மையங்களை மூடுவதற்கான திட்டங்களை வகுப்பது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்காது.
சமூக நலத்துறை கைவிட வேண்டும்
எனவே சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும். சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.
காலை உணவுத்திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.