அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்
அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.
அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான (நிலச்சீர்திருத்தம்) பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பீலா ராஜேஷ் பேசியதாவது:-
இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக துறை வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள முன்னோடி திட்டங்கள் அனைத்து பகுதி மக்களுக்கு ஒரே சீரான வகையில் சென்றவடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதிவேடுகள் ஆய்வு
தொடர்ந்து, வருவாய் துறையில் 2 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் பதிவேடுகள் தணிக்கை குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடன் பீலா ராஜேஷ் ஆலோசனை நடத்தினார். மேலும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், உதவி கலெக்டர்கள் சரண்யா, சதீஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் ஜாகீர் உசேன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நில அளவை பிரிவு உதவி இயக்குனர் சேகரன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.