அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் ஒரே சீராக சென்றடைய வேண்டும்


அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் ஒரே சீராக சென்றடைய வேண்டும்
x

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் ஒரே சீராக சென்றடைய வேண்டும் என்று ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் கதிர்ஆனந்த் எம்.பி. கூறினார்.

திருப்பத்தூர்

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் ஒரே சீராக சென்றடைய வேண்டும் என்று ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் கதிர்ஆனந்த் எம்.பி. கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. தலைமை தாங்கினார். துணை தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வரவேற்று பேசினார்.

கூட்டத்திற்கு பிறகு கதிர்ஆனந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைந்து முடிக்க ஆலோசனை

திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிகள் குறித்து திஷா கமிட்டி என்ற குழு மைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி இயக்கம், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கடன் உதவி வழங்குதல், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் போன்ற பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், பணி முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் தாமதமாக நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த குழுவின் முக்கிய பணியாக மத்திய அரசு நிதி எந்தெந்த துறைக்கு சென்றுள்ளது என்று ஆய்வு செய்வது. அதன் அடிப்படையில் அனைத்து துறை வளர்ச்சி பணி திட்டங்கள் நிதி, செலவினங்கள், வெளிப்பாடுகள், மற்றும் குறைகள் குறித்தும், மத்திய, மாநில அரசு இணைந்து செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே சீராக

இனிவரும் காலங்களில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை இக்கூட்டம் நடைபெறும். அடுத்து வரும் ஆய்வு கூட்டங்களில் அனைத்து துறை அலுவலர்களும் புள்ளி விவரத்துடன் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த விளக்கம் அளிக்க வேண்டும். சரிவர சொல்லாத, செயல்படாத அலுவலர்கள் மீது நடவடிககை எடுக்க பரிந்துரைக்கப்படும். மாவட்டத்தின் தேவைகள் மற்றும் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்ப அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.

மத்திய, மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் ஒரே சீராக சென்றடையும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவ.எஸ்.ராஜேந்திரன், அனைத்து ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், திஷா குழு உறுப்பினர்கள், அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story