ரூ.37½ லட்சத்தில் அரசு பள்ளி கட்டிடங்கள்
திண்டுக்கல் சீலப்பாடி, தாமரைப்பாடியில் ரூ.37½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடங்களை, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து திண்டுக்கல் சீலப்பாடி, தாமரைப்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலா ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, அண்ணாத்துரை, அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் நந்தகோபால், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் முத்துசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், மேற்கு மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் சசிகுமார், நிர்வாகிகள் முருகன், திராவிட ராணி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் நாகராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசும்போது, 25 தொகுதிகளில் வெற்றிபெற உழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை வகிக்கும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.