ஏரலில் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவிகள்


ஏரலில் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவிகள்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தில் வகுப்பறை கட்டிடங்களை உடனே கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

அரசு பள்ளிக்கூடத்தில் மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கிறார்கள். ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களை உடனே கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி 3 கட்டிடங்களில் 17 வகுப்பறைகளுடன் இயங்கி வந்தது. இந்த பள்ளிக்கூடத்தில் 600 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால், அங்கு படித்து வந்த மாணவிகள் தற்காலிகமாக ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

தொடர்ந்து ஏரல் அரசு பள்ளிக்கூடத்தில் இருந்த 2 கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டன. ஒரு கட்டிடத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டும் படித்து வருகின்றனர்.

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் சிறுத்தொண்டநல்லூர் பள்ளிக்கூடத்திலும் படித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சிறுத்தொண்டநல்லூர் பள்ளிக்கூடத்திலும் போதுமான கட்டிட வசதி இல்லை. இதனால் மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் நிலை உள்ளது. மேலும், நீண்ட தூரம் மாணவிகள் நடந்து செல்வதால் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும், பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நோய் தொற்றுக்கும் ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால், ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை விரைவாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தரையில் அமர்ந்து...

இதுகுறித்து ஏரலை சேர்ந்த சொக்கலிங்கம் கூறும்போது, ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூட கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

இதனால் மாணவிகள் அனைவரும் ஏரலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுத்தொண்டநல்லூர் அரசு பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்பட்டனர். அந்த பள்ளிக்கூடத்தில் போதுமான வகுப்பறைகள் இல்லை. அங்கு மரத்தடியில் அமர்ந்து குழந்தைகள் படித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் தோல் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் ஏரல் பள்ளிக்கூடத்தில் விரைந்து கட்டிடங்கள் கட்டி மாணவிகளின் கல்வி பாதிக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

கட்டிடம்

ஏரலை சேர்ந்த சந்திரசேகர் கூறும்போது, ஏரல் அரசு பெண்கள் பள்ளிக்கூடம் ஏரல் பகுதியை சேர்ந்த மாணவிகள் படிப்பதற்கு வசதியாக இருந்தது. தற்போது கட்டிடம் சேதம் அடைந்து விட்டதால், சிறுத்தொண்டநல்லூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். அங்கு போதிய வசதிகள் இல்லாமல் மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஏரல் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு இதுவரை எந்தவித நிதி ஒதுக்கீடு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்த நேரத்தில் போதிய இடவசதி இல்லாமல் சிறுத்தொண்டநல்லூர் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரல் பள்ளியில் 2 வகுப்புகளும், சிறுத்தொண்டநல்லூரில் மற்ற வகுப்புகளும் செயல்படுவதால் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடியாத நிலையும் உள்ளது. ஆகையால் ஏரல் அரசு பள்ளிக்கூடத்துக்கு விரைந்து கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

போக்குவரத்து வசதி

ஏரலை சேர்ந்த ஆவுல் பாதுஷா கூறும்போது, ஏரல் அரசு பெண்கள் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த மாணவிகள், சிறுத்தொண்டநல்லூரில் படித்து வருகின்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பள்ளிக்கூடத்துக்கு மாணவிகள் சென்று வருவதற்கு வசதியாக பஸ்கள் இயக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் மாணவிகள் இலவசமாக பஸ்சில் சென்று வர சிலர் நிதியுதவி அளித்தனர். அதன்பிறகு மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவிகள் பஸ்சில் செல்வதை தவிர்த்து நடந்தே சென்று வருகின்றனர்.

இதனால் பஸ்சும் பள்ளிக்கூடத்துக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. மாணவிகள் நீண்ட தூரம் நடந்து செல்வதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மாணவிகளுக்கு போதுமான கழிவறை வசதி, வகுப்பறைகள், போக்குவரத்து வசதி இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பல மாணவிகள் அந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வேறு பள்ளிக்கூடத்துக்கு மாறுதல் பெற்று சென்று விட்டனர். ஆகையால் மாணவிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதே போன்று ஏரல் அரசு பள்ளிக்கூடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உடனடியாக கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.


Next Story