வாழப்பாடியில் மது போதையில் தள்ளாடிய அரசு பள்ளி மாணவர் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பெற்றோர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி,
மதுபோதையில் தள்ளாடிய மாணவர்
வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் பள்ளி சீருடையிலே மது அருந்தி விட்டு மதுபோதையில் சாலையில் தள்ளாடி விழுகிறார். அந்த மாணவரை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்கிறார். இதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மது போதைக்கு அடிமையாகி வருவதோடு மது போதையிலே பள்ளிக்கு செல்வதோடு ஆசிரியர்களிடம் தகாராறில் ஈடுபட்டு வரும் சம்பவம் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த நிலையில், வாழப்பாடி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் மதுபோதையில் சாலையில் தள்ளாடி கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவர்கள்
இதே அரசுப்பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் கபடி போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர். குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்து தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் இந்தியஅளவில் சாதனை படைத்து வரும் வேளையில், இது போன்ற ஒரு சில மாணவர்களின் செயலால் ஒட்டு மொத்த அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழலால் அரசு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மாணவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.