சரியான வழிகாட்டுதல் இருந்தால் அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்கலாம்; மருத்துவ தரவரிசை பட்டியலில் 3-வது இடம் பிடித்த மாணவர் பேட்டி
சரியான வழிகாட்டுதல் இருந்தால் அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்கலாம் என்று மருத்துவ தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் 3-வது இடம் பிடித்த மாணவர் முருகன் பேட்டி அளித்தார்.
3-வது இடம் பிடித்து சாதனை
மருத்துவ தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த பரணிபுத்தூரை சேர்ந்த மாணவர் முருகன், தமிழகத்தில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். இதையடுத்து அவரது பெற்றோரும், சகோதரர்களும், உறவினர்களும் அவருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அரசு பள்ளியில் படித்த இவர், முதல் முறை நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஒரு ஆண்டு காத்திருந்து 2-வது முறையாக நீட் தேர்வு எழுதி அதில் 560 மதிப்பெண்கள் பெற்று தற்போது தமிழகத்தில் 3-வது மாணவராக வந்துள்ளார்.
560 மதிப்பெண்கள்
முருகனின் தந்தை பெயர் இசக்கி முத்து. பழ வியாபாரம் செய்து வருகிறார். தாயார் முத்துலட்சுமி. இசக்கிமுத்து-முத்துலட்சுமி தம்பதிக்கு 3 மகன்கள், ஒரு மகள். இவர்களில் 2-வது மகனான முருகன், போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். 12-ம் வகுப்பு பொது தேர்வில் 600-க்கு 534 மதிப்பெண்கள் பெற்ற இவரை பார்த்த ஆசிரியர்கள், அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் கிடைக்கும் என நீட் தேர்வை எழுத ஊக்கப்படுத்தி உள்ளனர்.
முதலில் எழுதியபோது குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 2-வது முறையாக பயிற்சி நிலையத்திற்கு சென்று நீட் தேர்வு எழுதினார். 2-வது முறை எழுதியதில் 700-க்கு 560 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இது குறித்து மாணவர் முருகன் கூறியதாவது:-
சரியான வழிகாட்டுதல்
மருத்துவ படிப்புக்கு அதிக செலவு ஆகும் என்பதால் 12-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணை வைத்து நிச்சயமாக இடம் கிடைக்கும் என்று பெற்றோரும், ஆசிரியர்களும் என்னை நீட் தேர்வை எழுத தயார் படுத்தினர். முதல் முறை தோல்வி அடைந்தாலும் 2-வது முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். நீட் தேர்வு குறித்த பயம் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் உள்ளது.
சரியான வழிகாட்டுதல் இருந்தால் அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்கலாம். எனது குடும்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் தான் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் டாக்டராகி சேவை செய்து மேல் படிப்பும் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.