அரசு பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு
மாதனூரில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் பஸ் நிறுத்தம் அருகில் அரசு மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் உடையராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் மாதனூர் எம்.சி.காலனி பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் வகுப்பறையில் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது எம்.சி.காலனி பகுதியை சேர்ந்த மாணவரை உடையராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாணவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து மாலையில் பள்ளி முடிந்த பின்னர் பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதியில் மாணவர்கள் சுமார் 15 நிமிடம் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதில் மாணவர்களுக்கு ஆதரவாக இரு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.