அரசு பள்ளி ஆசிரியர்கள் சீர்வரிசையுடன் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
நாகை அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சீர்வரிசைகளுடன் சென்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடத்தினர்.
நாகை அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சீர்வரிசைகளுடன் சென்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடத்தினர்.
சீர்வரிசைகளுடன் விழிப்புணர்வு
நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா தலைமையில், ஆசிரியர்கள் சீர்வரிசையுடன் ஐவநல்லூர் ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு நடத்தினர். தொடர்ந்து சிறுவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து தங்களது அரசு பள்ளியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக்கூறினர்.
மேலும் நோட்டு, பேனா, பென்சில், டிபன் பாக்ஸ், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை ஒரு தாம்பூலத்தில் வைத்து அதனை சீர்வரிசையாக சிறுவர்களிடம் வழங்கினர். இது அந்த பகுதியில் உள்ள பெற்றோரையும், பொதுமக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சிறப்பான கல்வி சேவை...
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சித்ரா கூறும்போது:-
அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி 100 ஆண்டுகள் நிறைவடைந்தும் சிறப்பாக கல்வி சேவை ஆற்றி வருகிறது. ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்த கொரோனா விழிப்புணர்வு போட்டியில் மாநில அளவில் எங்களுடைய பள்ளி மாணவி 2-ம் இடம் பிடித்துள்ளார்.
அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளியில் இருக்கும் பொழுது நாம் ஏன் தனியார் பள்ளிகளை நாடி செல்ல வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராஜதிலகம், இல்லம் தேடி கல்விதிட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.