ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
நீடாமங்கலம்;
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
போராட்டம்
ஊரக வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், மக்கள் நலன் மற்றும் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு பெரிய ஊராட்சிகளை பிரிக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 2 நாட்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
900 போ்
இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட அனைத்து ஒன்றிய அலுவலகங்களில் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அரசின் பணிகள் சற்று தேக்கமடைந்தது.போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் செந்தில், வட்ட நிர்வாகிகள் சிவநேசன், கண்ணன், ஆனந்த மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 900 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெறிச்சோடியது
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பூட்டப்பட்டு அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பல்வேறு தேவைகளுக்காக அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதைப்போல மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 78 பணியாளர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.