அரசு போக்குவரத்து கழக அதிகாரியை வழிமறித்து சரமாரி தாக்குதல்


அரசு போக்குவரத்து கழக அதிகாரியை வழிமறித்து சரமாரி தாக்குதல்
x
தினத்தந்தி 4 Aug 2023 1:30 AM IST (Updated: 4 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில், அரசு போக்குவரத்து கழக அதிகாரியை வழிமறித்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி

போக்குவரத்து கழக அதிகாரி

தேனி சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 52). இவர் அரசு போக்குவரத்து கழக போடி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தேனி சுப்பன்தெரு திட்டச்சாலை வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த சாலையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சி அருகே சென்று கொண்டு இருந்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அந்த நபர்கள், பாண்டியராஜனை வழிமறித்து உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

மர்ம நபர்கள்

அப்போது அந்த வழியாக பிற வாகனங்களில் இருந்து வந்த மக்கள் சத்தம் போட்டதால், மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இந்த தாக்குதலில், பாண்டியராஜன் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவர் தேனி போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பாண்டியராஜனை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தாக்கியவர்கள் யார்? என்று தெரிந்தால் தான் தாக்குதலுக்கான காரணம் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.


Next Story