அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் தர்ணா
அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர், அக்கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை திரும்பச் செலுத்திவிடுவதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் திரும்பச் செலுத்தாதால் மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நகர தலைவர் மகாலெட்சுமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், துணை தலைவர்கள் கார்த்திகாதேவி, வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதிக்குள் பணத்தை திரும்பித்தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.