கவர்னர் தொடர்ந்து அரசியல் செய்துவருகிறார்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்தித்து வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை,
நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இதனிடையே, அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;
ஒவ்வொரு துறையிலும் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியல் செய்கிறார். பல்கலைக்கலக விவகாரங்களில் கவர்னர் தலையிடுகிறார். பல்கலைக்கழகங்களில் கூட்டங்களை நடத்தவேண்டும் எனக்கூறுபவர் கவர்னர் மாளிகையில் கூட்டம் நடத்துவது ஏன்? நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் மாளிகையில் நடக்கும் என்பதை எப்படி ஏற்க முடியும்?
பல்கலைக்கழகங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆளுநர் முயற்சி செய்கிறார். பல்கலைக்கழகம் தன்னிச்சையாக செயல்படவில்லை என ஆளுநர் கூறுகிறார்;செயலாளரை கூட சந்திக்க முடியவில்லை என ஆளுநர் தெரிவிக்கிறார் ஆனால், நான் இல்லாமலேயே பல கூட்டங்களை அவர் நடத்தி இருக்கிறார்"
பல்கலைக்கழகங்களில் சில குறைகள் இருக்கலாம். தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது. தவறுகளை அமைச்சராகிய என்னிடமோ, செயலாளரிடமோ தெரிவிக்கலாம். ஆனால், நேரடியாக பத்திரிகைக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசையே மதிக்காமல்கவர்னர் செயல்படுகிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்தித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.