கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு


கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு
x

தி.மு.க. நாளை (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் அறிவித்துள்ள நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்துவருகிறது. சமீபத்தில், 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை சந்தித்துப் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, 'எனக்கு அதிகாரம் இருந்தால் 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்' என்று கூறினார்.

கவர்னரின் இந்த கருத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 7 மணியளவில் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கியுள்ள அவர், முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று (சனிக்கிழமை) சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச இருப்பதாக தெரிகிறது. நாளை மாலை டெல்லியில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.


Next Story