ஊட்டியில் இருந்து குன்னூருக்கு மலை ரெயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி பயணம்


ஊட்டியில் இருந்து குன்னூருக்கு மலை ரெயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி பயணம்
x

ஊட்டி-குன்னூர் இடையே இயற்கை காட்சிகளை ரசித்தவாறு ஊட்டி மலை ரெயிலில் கவர்னர் குடும்பத்துடன் பயணம் செய்தார். அப்போது சுற்றுலா பயணிகளுடன் சகஜமாக பேசியபடி சென்றார்.

ஊட்டி,

கல்வி நிறுவனங்களில் பாடப்புத்தகங்களை தமிழாக்கம் செய்வது குறித்த துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க கடந்த 3-ந் தேதி இரவு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து குடும்பத்துடன் ஊட்டி வந்தார். இதை தொடர்ந்து 5-ந் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் ஊட்டி தொட்டபெட்டா சிகரம் சென்று அங்கிருந்தவாறு இயற்கை அழகை கண்டு ரசித்தார்.

இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று மதியம், 12.10 மணியளவில் தனது குடும்பத்துடன் ஊட்டி ரெயில் நிலையம் சென்றார். அப்போது ரெயில்வே உதவி இயக்குனர் சரவணன் புத்தகம் கொடுத்து அவரை வரவேற்றார்.

மலை ரெயிலில் பயணம்

இதைத்தொடர்ந்து ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து பாரம்பரிய மலை ரெயில் மூலம், குன்னூர் சென்றார். அப்போது ஊட்டி - குன்னூர் இடையே கேத்தி பள்ளத்தாக்கின் இயற்கை காட்சி, படகு இல்லம், குகை பகுதிகளை கடந்து ரெயில் சென்றதை பார்த்து பரவசமடைந்தார். மேலும் நீலகிரி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தார்.

அப்போது சுற்றுலா பயணிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி சகஜமாக பேசியபடி சென்றார்.

போலீஸ் பாதுகாப்பு

மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்திற்கு மதியம், 1.20 மணிக்கு சென்றது. அப்போது அவரை குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ணகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அவருடன் ரெயில்வே ஊழியர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து குன்னூரிலிருந்து கார் மூலம் ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு வந்தார். முன்னதாக, கவர்னர் ரெயில் பயணத்தையொட்டி ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story