"தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை இத்தோடு கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" - சீமான் எச்சரிக்கை


தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை இத்தோடு கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும் - சீமான் எச்சரிக்கை
x

தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை இத்தோடு கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு வெஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வைத்துள்ளதாக தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரத்திமிரில் துளியும் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள் மத்தியில் நச்சுக்கருத்தை உமிழ்ந்து, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை இழிவுப்படுத்திப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தொல் தேசிய இனத்தின் மக்களான தமிழர்களை பணத்தை வாங்கிக்கொண்டு போராடுவதாகக் கொச்சைப்படுத்தியிருப்பது அபத்தத்தின் உச்சமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

இங்கிலாந்து வாழ் இந்தியக் குடிமகனான அனில் அகர்வால் எனும் தனிப்பெரும் முதலாளிக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை நாட்டு நலனுக்கு எதிரானதாகக் கற்பிக்க முனையும் கவர்னர் ஆர்.என்.ரவியின் வாதம் அப்பட்டமான பிதற்றலாகும். சுற்றுச்சூழல் விதிமீறலுக்காக மூடப்பட்டு, பின்பு, 100 கோடி ரூபாய் அபராதத்தோடும், நிபந்தனைகளோடுமே உச்ச நீதிமன்றத்தால் இயங்க அனுமதிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைதான் நாட்டின் நலனுக்கான ஆலையா? 2013ஆம் ஆண்டு ஆலையின் துணைத்தலைவர் சுங்கவரி ஏய்ப்புக்காகக் கைது செய்யப்பட்டது கவர்னர் ஆர்.என்.ரவிக்குத் தெரியுமா? ஆணவத்திலும், அகம்பாவத்திலும் எதுவுமே தெரியாது, அரைவேக்காட்டுத்தனமாக உளறலாமா?

போராட்டத்தில் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்ட மக்களைப் பணத்தை வாங்கிக் கொண்டு போராடியதாகக் கூறி அவதூறு சேற்றை வாரியிறைக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, 40க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுவாங்கியும் இணையச் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்குக் காரணமென்ன? கவர்னரது மொழி நடையில், அதற்கும் பணம்தான் காரணமென எடுத்துக் கொள்ளலாமா? பணத்திற்காகக் கங்காணி வேலைசெய்வதும், அதிகார வர்க்கத்தின் ஏவல் பிரிவாகச் செயல்பட்டு, சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பது கவர்னருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம்; இனமானத் தமிழர்களுக்கு இல்லை!

தமிழர்களின் வரிப்பணம் தரும் வருவாயில் உண்டுக் கொளுத்துவிட்டு, தமிழர்களை இழித்துரைத்துப் பேசுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பெரும் பெரும் ஆட்சியாளர்களையே அடக்கி ஒடுக்கி, அடிபணிய வைத்த தமிழ் மண்ணிது. இந்தியப் பெருநாட்டிற்கே அரசியல் திசைவழிக் காட்டும் பெருமிதமிக்க தமிழர் நிலமிது. ஆகவே, தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை, இத்தோடு கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story