ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இளைஞர் சல்மான் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்டில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன் பின்னர் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 35 ஆகும்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்துக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் கடந்த நவம்பர் 27-ந் தேதி காலாவதியான பின்னர், 10 நாட்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக கவர்னர் கேட்ட கேள்விகளுக்கு கடந்த நவம்பர் 25-ந்தேதியே தமிழக அரசு விளக்கம் அளித்து விட்டது. அதன்பிறகும் 2 வாரங்களாகிவிட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல. தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளில் இருந்து தமிழக மக்களை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.