கவர்னர் கூறிய கருத்துக்களை அரசியலாக்க வேண்டாம்:ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் வேண்டுகோள்
தமிழக கவர்னர் கூறிய கருத்துக்களை அரசியலாக்க வேண்டாம் என்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த நான்சி, ஸ்டெர்லைட் ஆதரவு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தனலட்சுமி மற்றும் மீனவ பிரதிநிதிகள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்களை மூளைச்சலவை செய்து போராட்டத்துக்கு தூண்டியதாக கவர்னர் தெரிவித்து உள்ளார். ஆனால் கவர்னர் மக்களை குறை கூறியதாக தவறாக திரித்து கூறப்படுகிறது. போராட்டத்துக்கு காரணமாக இருந்த போராட்டக்காரர்கள் மீது மட்டும் தான் கவர்னர் குற்றம் சாட்டி உள்ளார். இது ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம். ஏற்கனவே இயங்கி வந்த ஆலை செயல்படக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் இல்லை. ஆகையால் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, கவர்னர் சொன்ன கருத்தை அரசியலாக்க வேண்டாம். ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் எங்கள் சந்ததிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.