கவர்னரின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது
கவர்னரின் பேச்சுகள், பதிவுகள் அனைத்தும் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
கல்வராயன்மலையில் மலைவாழ்மக்கள் பல ஆண்டுளாக பயிர் செய்து வரும் 13 ஆயிரம் விவசாய நிலம் தற்போது காப்புகாடாக மாற்றி கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரியும், மலைவாழ் மக்கள் அனுபவ நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரியும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆனந்தன், ஏழுமலை, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமாரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கே.பாலகிருஷ்ணன் கொடுத்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வன உரிமை சட்டம்
கல்வராயன்மலையில் நீண்ட காலமாக மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. 2005-2006-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வன உரிமை சட்டத்தின் படி நிலம் வழங்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு 13 ஆயிரம் ஏக்கர் நிலம் காப்புக்காடு என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை பயன்படுத்தி வனத்துறையினர் ஏற்கனவே சாகுபடி செய்த நிலங்களில் பயிர் செய்யக்கூடாது, ஆடு, மாடு மேய்க்க கூடாது என துன்புறுத்தி வருகின்றனர்.
வன உரிமை சட்டத்தின் படி மனு கொடுத்தவர்களுக்கு 2 தாசில்தாரை அனுப்பி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், 430 பேரின் மனுக்களுக்கு பட்டா கொடுக்கலாம் என வந்துள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். ஆதிவாசி, மலைவாழ் மக்களை வனத்துறையினர் தொந்தரவு செய்வதை நிறுத்தி வேண்டும்.
ஏற்றுக்கொள்ள முடியாது
கவர்னரின் பேச்சு, பதிவுகள் அனைத்துமே அரசியல் சாசனத்திற்கு விரோதமான முறையில், மாநில அரசுக்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்ற அடிப்படையில் உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசின் சட்டமன்றத்தில் கவர்னர் தொடக்க உரையின்போது அரசாங்கம் என்ன தயார் செய்து கொடுத்திருக்கிறதோ அந்த உரையைப் படிப்பதற்கு மாறாக அவர் சில வார்த்தைகளை தவிர்த்து விட்டு பேசுகிறார்.
மாநில அரசு தயார் செய்துள்ள அறிக்கையை படிப்பதில் மாற்றுவதற்கு, திருத்துவதற்கான உரிமை அவருக்கு சட்ட வரம்பில் இல்லை. இருப்பினும் அதை மீறி அவர் செய்திருப்பது அரசியல் சாசன வரம்பிற்கு மீறிய காரியம்.
பாராட்டக்கூடியது
உண்மையிலேயே பாராட்டக்கூடிய நல்ல விஷயம் என்னவென்றால் இந்த சூழ்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக கவர்னர் அவையில் இருக்கும் போதே கவர்னர் நாங்கள் எழுதிக் கொடுத்த அறிக்கைக்கு மாறாக அவர் பேசியிருக்கிற வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் எனவும், அரசு தயாரித்திருக்கிற அந்த அறிக்கையை மட்டும் அவை குறிப்பில் ஏற்க வேண்டும் என கேட்க, சபாநாயகர் கவர்னரின் உரையை நீக்கி அரசு கொடுத்துள்ள உரையை பதிவு செய்துள்ளது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். இதுவரைக்கும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய குறிப்பு தான் அவை குறிப்பில் இருந்து நீக்குவார்கள்.ஆனால் வரலாற்றில் முதல்முறையாக கவர்னர் பேசிய குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.