அரசு பஸ்-கார் மோதல்: வளைகாப்புக்கு சென்று திரும்பிய 3 பேர் பலி
அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் வக்கீல் மனைவி உள்பட 3 பேர் பலியானார்கள்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 57) வக்கீல். இவருடைய 2-வது மகன் சர்வேஸ், கிருஷ்ணகிரியில் உள்ளார். அவருடைய மனைவிக்கு கிருஷ்ணகிரியில் வளைகாப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
விழா முடிந்ததும் சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து ராமநாதபுரம் நோக்கி காரில் புறப்பட்டு வந்தார். பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் நான்கு வழிச்சாலையில் வந்தபோது அந்த காரும், ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்சும் திடீரென மோதிக்கொண்டன.
3 பேர் பலி
இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த சோமசுந்தரத்தின் மனைவி மணிமேகலை, நிர்மலா என்ற கிருத்திகா(55), மற்றும் ராமநாதபுரம் அருகே முதுநாளையை சேர்ந்த கார் டிரைவர் செல்வகுமார் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் சோமசுந்தரம், அவருடைய மகன் அர்ஜுன்(35), இவருடைய மனைவி ரஞ்சனி(34), இவர்களுடைய மகன் பாகல்ரியா(9), அயான் நன்விட் (7) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.