லாரி மீது அரசு பஸ் மோதல்; டிரைவர் பலி
லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் உயிரிழந்தார்.
பாடாலூர்:
லாரி மீது மோதியது
தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). அரசு பஸ் டிரைவரான இவர், நேற்று சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு விரைவு பஸ்சை ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் கண்டக்டரும், மாற்று டிரைவருமான திருநெல்வேலி பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம்(45) மற்றும் பயணிகள் இருந்தனர்.
அந்த பஸ் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட பகுதியில் வந்தது. அப்போது அதே வழியில் பஸ்சுக்கு முன்னால் ஒரு லாரி சென்றது. அந்த லாரியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டிரைவர் வேணு(20) ஓட்டினார். நாரணமங்கலம் கிராமத்தை கடந்து சென்றபோது திடீரென லாரி மீது அரசு பஸ் மோதியது.
சாவு
இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.