அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்
அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கப்பட்டிக்கு தினசரி காலை 10.40 மணிக்கு அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ் செல்வது வழக்கம். இந்த பஸ் சரிவர இயக்கப்படாததால் இது பற்றி கொருக்குப்பட்டியை சேர்ந்த சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழக கிளையில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த பஸ் முறையாக இயக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த பஸ்சில் கொருக்குப்பட்டியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பயணம் செய்தார். அப்போது கல்லூரி மாணவியிடம் அந்த பஸ் கண்டக்டர் தங்கவேலு இந்த பஸ் சரியாக இயங்கவில்லை என்று யார் புகார் தெரிவித்தது என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கல்லூரி மாணவி நான்தான் புகார் செய்தேன் என்று தெரிவித்ததால் தங்கவேலு கல்லூரி மாணவியிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவியின் பெற்றோரும், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமனும் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் மாரிமுத்துவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கிளை மேலாளர் மாரிமுத்து இதுகுறித்து விருதுநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் பொது மேலாளர் சிவலிங்கத்திடம் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விருதுநகர் மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் சிவலிங்கம் இதுகுறித்து விசாரணை நடத்தி கண்டக்டர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி பொது மேலாளர் சிவலிங்கம் கூறுகையில், பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் அதற்கு உரிய முறையில் பதில் அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் மனம் வருந்தும் வகையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் பேசுவது தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.