அரசு பஸ் ஊழியர் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது- சிஐடியூ, ஏஐடியூசி வெளிநடப்பு
சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ரூ.2,012, அதிகபட்சமாக ரூ.7,981ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ.1,965, அதிகபட்சம் ரூ.6,640ஆக உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், சிஐடியூ, ஏஐடியூசி ஒப்பந்தம் இறுதி செய்யதை ஏற்கவில்லை. இதனால், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது;ஊதிய ஒப்பந்தத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.