கோகூர் வரை மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும்
திருவாரூரில் இருந்து கீழ்வேளூர் வழியாக கோகூர் வரை மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கல்:
திருவாரூரில் இருந்து கீழ்வேளூர் வழியாக கோகூர் வரை மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை, கோகூர், ஆனைமங்கலம் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 100-க்கு மேற்பட்ட மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள், தினமும் வேலைக்கு செல்பவர்கள் கீழ்வேளூர், நாகை, திருவாரூர் பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியாக திருவாரூரில் இருந்து கோகூர் வரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த பஸ் மட்டும் இயக்கப்படவில்லை.
மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும்
பஸ் இயக்கப்படாததால் கோகூர், வடகரை ஆனைமங்கலம் கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கீழ்வேளூர், நாகை, திருவாரூர் பகுதிகளுக்கு மிகுந்த சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர்.
மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட திருவாரூரில் இருந்து கீழ்வேளூரில் வழியாக கோகூர் வரை சென்ற அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.