பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலனை-அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்


பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலனை-அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
x

பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலனை செய்யும் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

திருச்சி

பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலனை செய்யும் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர் திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணைக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அங்கு பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி, மானிய உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார்.

இதில் 776 பயனாளிகளுக்கு ரூ.4.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி பேசும்போது, பால் உற்பத்திக்கு முதுகெலும்பாக பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இதே நிலை தான் இருக்கிறது. ஆகவே பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது. அதனை 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க செய்ய பணி தொடங்கியுள்ளது என்றார்.

தனியார் நிறுவனம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் பால் கொள்முதல் 28 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி கேட்பது நியாயமானது. இதனை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும். ஆவின் நிறுவனத்தை பொருத்தமட்டில் பால் உற்பத்தி அதிகமானாலும் குறைந்தாலும் ஒரு நிலையான விலையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் அவ்வாறு வழங்குவதில்லை. தனியார் நிறுவனத்தை கண்டு ஒரு அரசாங்கம் அச்சப்படாது. இருக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே தனியார் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும். ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஆலை

முன்னதாக, ஆவின் பால்பண்ணை வளாகத்தில் புதிதாக ரூ.5 கோடியே 30 லட்சத்தி்ல் கட்டப்பட்டு வரும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஆலை கட்டிடத்தின் கட்டுமான பணியினையும், வளாகத்தில் அமைந்துள்ள பால் பதப்படுத்துதல் தயாரிப்பு கூடத்தினையும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை நிர்வாக இயக்குனர் வினீத், ஆவின் பொது மேலாளர் பெருமாள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story