2 வயது குழந்தை விழுங்கிய ஊக்கை அகற்றிய அரசு டாக்டர்கள்
2 வயது குழந்தை விழுங்கிய ஊக்கை அரசு டாக்டர்கள் அகற்றினர்.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அருகே உள்ள குண்டூர் பர்மாகாலனியை சேர்ந்த 2 வயது குழந்தை உணவு உட்கொள்ளும்போது, தவறுதலாக ஊக்கை விழுங்கியது. இந்தநிலையில் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டதையடுத்து என்ன காரணம்? என தெரியாத பெற்றோர் குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, குழந்தைக்கு எக்ஸரே எடுத்து பார்த்தபோது, தொண்டை பகுதியில் ஊக்கு திறந்தநிலையில் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் அண்ணாமலை தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடனடியாக குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து டியூப் வழியாக ஊக்கை வெளியே எடுத்தனர். இதனை தொடர்ந்து குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.