கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்சேதமடைந்த சமையல் கூடத்தை அகற்ற கோரிக்கை
கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த சமையல் கூடத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கம்பம் காந்திஜி பூங்கா அருகில் ஆங்கூர்ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில வழி கல்வி மற்றும் தமிழ் வழி கல்வி உள்ளதால் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்து வரும் மாணவிகளுக்கு சத்துணவு திட்டம் மூலம் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சமையல் கூடங்கள் உள்ளன. இந்த சமையல் கூடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது.
இதனால் சமையல் கூடத்திற்கு வெளியே உள்ள திறந்தவெளி பகுதியில் மதிய உணவு தயார் செய்து மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திறந்த வெளி பகுதியில் உணவு தயாரிப்பதால் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது. எனவே சேதமடைந்த்த சமையல் கூடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக சமையல் கூடம் கட்ட வேண்டும். மேலும் தற்போது தற்காலிகமாக தகரத்தால் மேற்கூரை அமைக்க வேண்டும் என முன்னாள் மாணவிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.