விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிவரும் அரசு ஆஸ்பத்திரி வளாகம்
விழுப்புரத்தில் விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிவரும் அரசு ஆஸ்பத்திரி வளாகம் அச்சத்தில் நோயாளிகள்
விழுப்புரம்
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தைகள், மகப்பேறு, கண் அறுவை சிகிச்சை அரங்கம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு விழுப்புரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது தவிர உள்நோயாளிகளாகவும் பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கட்டிடங்களை அவ்வப்போது சரிவர பராமரிக்காததால் அவைகள் பாழடைந்த நிலையில் வீணாகி வருகிறது. ஒரு சில கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.
இது தவிர ஆஸ்பத்திரி வளாகத்தினுள் ஒவ்வொரு கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்து தீவுபோல் காணப்படுகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பாம்புகள், பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இங்கு வரும் நோயாளிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். இரவு நேரம் இருள்சூழ்ந்த பகுதியில் விஷஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதோடு மட்டுமின்றி சில சமயங்களில் பகலிலும் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக அங்கு வருபவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். இதனால் இந்த ஆஸ்பத்திரி வளாகம் விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிவருவதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஆஸ்பத்திரியின் பின்புற பகுதியில் மதில் சுவர் உடைந்து கிடப்பதால் இரவு நேரங்களில் அதன் வழியாக சமூகவிரோதிகள் ஆஸ்பத்திரி வளாகத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு பயந்தே சிலர் இங்கு உள்நோயாளிகளாக தங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் சூழ்ந்திருக்கும் முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு தீயணைப்புத்துறை மூலம் இங்கிருக்கும் விஷஜந்துக்களை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் சமூகவிரோதிகளின் அட்டகாசத்தை ஒழிக்க ஆஸ்பத்திரியின் பின்புற பகுதியில் மதில்சுவர் அமைப்பதோடு, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் இருந்து ஆஸ்பத்திரிக்கு பாதை வசதி ஏற்படுத்திக்கொடுத்து அதன் வழியாக இங்கு வரும் நோயாளிகளின் வாகனங்கள் செல்ல அனுமதித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுத்தால் முட்புதர்களும் வளராது. விஷஜந்துக்களின் நடமாட்டமும் ஒழியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?