இடிந்து விழும் அபாயத்தில் அரசு அலுவலர் குடியிருப்பு


இடிந்து விழும் அபாயத்தில் அரசு அலுவலர் குடியிருப்பு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:30 AM IST (Updated: 21 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

இடையக்கோட்டையில் அரசு அலுவலர் குடியிருப்பு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம அருகே இடையக்கோட்டையில், நங்காஞ்சியாற்றின் குறுக்கே நங்காஞ்சியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு, பாச்சலூர் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சியாறு அணை தற்போது நிரம்பி வழிகிறது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 615 ஏக்கர் நிலமும், கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 635 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன.

அணைக்கு செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு 16 வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள், ஓடுகளால் வேயப்பட்டதாகும். குடியிருப்பு கட்டப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் அங்கு வசித்தனர். அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதனால் அவதிப்பட்ட அரசு ஊழியர்கள், வீடுகளை காலி செய்து விட்டனர்.

தற்போது அந்த குடியிருப்பு, போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்து விட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் குடியிருப்பில் உள்ள வீடுகள் இருக்கின்றன. பல வீடுகள் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை அரசு ஊழியர் குடியிருப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story