ஓமலூரில் பரிதாபம்:அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை


ஓமலூரில் பரிதாபம்:அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2022 4:10 AM IST (Updated: 19 Nov 2022 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்

ஓமலூர்:

பள்ளிக்கூட ஆசிரியை

ஓமலூர் பேரூராட்சி 2-வது வார்டு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி (வயது 57). இவர் ஓமலூர் காமண்டபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவருடைய கணவர் ஜனார்த்தனன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். விஜயகுமாரியின் மகளுக்கு திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

உடல்நலம் பாதிப்பு

விஜயகுமாரிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதில் விஜயகுமாரி மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் அவருடைய கணவர், விஜயகுமாரியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. நேற்று காலையில் அவர், வழக்கம் போல் கடையை திறக்க ராசிபுரம் சென்றதாக தெரிகிறது.

நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் விஜயகுமாரியின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

தற்கொலை

தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் மற்றும் விஜயகுமாரியின் கணவர் விரைந்து வந்தனர். வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு விஜயகுமாரி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்த ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story