நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள அரியலூர்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 46), விவசாயியான இவர் விவசாய நிலத்துக்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்காக கடந்த 18.12.2017 அன்று கெடார் பஸ் நிறுத்தம் அருகில் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் நஷ்ட ஈடு கேட்டு கலியமூர்த்தி மனைவி வளர்மதி, விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 9.9.2020 அன்று பாதிக்கப்பட்ட கலியமூர்த்தியின் குடும்பத்துக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடாக ரூ.8 லட்சத்து 13 ஆயிரத்து 700-ஐ வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் மனுதாரர் வளர்மதி சார்பில் வக்கீல் பன்னீர்செல்வம் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ், பாதிக்கப்பட்ட கலியமூர்த்தியின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சத்து 52 ஆயிரத்து 946-ஐ வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என்று 25.8.2022 அன்று உத்தரவிட்டார். இதில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடாக வழங்கிவிட்ட நிலையில் மீதமுள்ள தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்காததால் நேற்று விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் விஸ்வநாதன் ஜப்தி செய்தார். அதன் பிறகு அந்த பஸ் விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.


Related Tags :
Next Story