விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
செஞ்சி,
செஞ்சி சக்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பராயன் மகன் துரை (வயது 30). இவர் கடந்த 21. 8.2014 அன்று தனியார் பஸ்சில் பயணம் செய்தார். திண்டிவனம் செஞ்சி சாலையில் களையூர் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ், அந்த தனியார் பஸ் மீது மோதியது. இதில் தனியார் பஸ்சில் பயணம் செய்த துரை படுகாயம் அடைந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நஷ்டஈடு கேட்டு வக்கீல் கிருஷ்ணன் மூலம் துரை, அரசு பஸ் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த செஞ்சி சார்பு நீதிமன்ற நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு துரைக்கு அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.5 லட்சத்து 28 ஆயிரத்து 242 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்க வில்லை. இதையடுத்து துரை கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி நளினகுமார், விபத்தில் பாதிக்கப்பட்ட துரைக்கு வட்டியுடன் நஷ்டஈடாக ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 88-ஐ வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லையெனில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு வந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.