விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

குடியாத்தத்தில் விபத்தில்பலியான விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

வேலூர்

குடியாத்தத்தில் விபத்தில்பலியான விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விபத்தில் விவசாயி பலி

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி ஜங்காலபள்ளி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 52), விவசாயி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது பஸ்மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் பலியான மணியின் மகன்கள் அசோக்குமார், வேலு, மகள்கள் சத்யா, பவித்திரா ஆகிய 4 பேரும் குடியாத்தம் கோர்ட்டில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி 2019 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மணியின் வாரிசுதாரர்களுக்கு ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 342 இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் மணியின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதனை தொடர்ந்து மணியின் வாரிசுதாரர்கள் மீண்டும் கோர்ட்டில் இழப்பீடு தொகையை வழங்க நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர்.

அரசு பஸ் ஜப்தி

மனுவை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பிரபாகரன், அரசு போக்குவரத்து கழகம், மணியின் வாரிசுதாரர்களுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.11 லட்சத்து 91 ஆயிரத்து 239 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பிறகும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனையடுத்து மீண்டும் மணியின் வாரிசுதாரர்கள் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சார்பு நீதிபதி ஜி.பிரபாகரன், அரசு டவுன் பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலையில் குடியாத்தம் சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளையாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.தேவராஜ், பி.ஆனந்தராஜ், மணியின் வாரிசுதாரர்கள் ஆகியோர் குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் செல்லும் டவுன் பஸ்சை பயணிகளுடன் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே நிறுத்தி ஜப்தி செய்தனர். இதனை தொடர்ந்து பயணிகளுடன் மீண்டும் பழைய பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். பின்னர் ஜப்தி செய்த பஸ்சை குடியாத்தம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர்.

8-ந் தேதிக்குள்

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழக்கறிஞர் மூலம், நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். அதில் விரைவில் இழப்பீடு தொகை வழங்குவதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜி.பிரபாகரன் வருகிற 8-ந் தேதிக்குள் மணியின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு டவுன் பஸ்சை விடுவித்தார்.

குடியாத்தத்தில் பயணிகளுடன் டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story