ஈசிஆர் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
கடற்கரைச் சாலை பகுதியை பறவைகள் வாழிடமாக மாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"சென்னையை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்கின்றன. அவற்றை பாதுகாப்பதன் மூலம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பறவைகள் வாழிடமாக மாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள நிலையில், அந்தச் சூழலை சீர்கெடுக்கும் வகையிலான நிகழ்வுகள் அப்பகுதியில் பெருமளவில் நடந்து வருவது கவலையளிக்கிறது.
சென்னை மாவட்டமும் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமும் ஏரிகளுக்கு பெயர் பெற்றவை. நீர் நிறைந்த ஏரிகளும், அவற்றையொட்டிய தாவரங்கள் நிறைந்த பகுதிகளும் அப்பகுதிகளை பறவைகள் வாழிடமாக மாற்றியுள்ளன.
இந்தச் சூழலுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கடலுடன் இணைந்திருக்கும் உப்பங்கழிகள், காப்புக்காடுகள் ஆகியவை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியை பறவைகளுக்கு சொர்க்கபுரியாக மாற்றியிருக்கின்றன. ஆனால், இந்த சூழல் வேகமாக சீரழிந்து வருவது கவலையளிக்கிறது.
பறவைகள் வந்து செல்லும் பகுதிகளில் கட்டுப்படுத்தப்படாத போக்குவரத்துக் காரணமாக மிகப்பெரிய அளவில் ஒலிமாசு ஏற்படுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக கோவளம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை பறவைகளின் வருகைக்கு முற்றிலுமாக முடிவு கட்டிவிடும் ஆபத்து உள்ளது. இதன் மூலம் பறவைகளுக்கு பெரும் தீமையை தமிழக அரசு இழைக்கிறது.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தத்துவத்தின்படி கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கு வரும் பறவைகளை பாதுகாக்க இனியாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறை பயன்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி, அங்கு மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.